Menu Close

உலகளாவிய அங்கீகாரத்திற்கான இலங்கையின் விவசாய சின்னம்

“பயிரிடுதல் பருவகால மாறுபாட்டின் நேர்மறையான தாக்கத்துடன் இலங்கை அரிசி வகைகளின் கண்டறியப்படாத ஊட்டச்சத்து பின்னணியை நாங்கள் ஆராய்ந்தோம்"

ஒவ்வொரு நபரும் அவர்களின் வளர்ச்சிக்கு ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியமான உணவைப் பெற வேண்டும். ஆனால், தற்போது பல்வேறு மானுடவியல் செயல்பாடுகள் காரணமாக பிரதான உணவில் இருந்து ஊட்டச்சத்து கூறுகள் அல்லது உணவுமுறைத் தேவைகள் குறைந்து வருகின்றன.

அரிசி இலங்கையில் வசிப்பவர்களால் அதிகம் நுகரப்படும் தானியமாகும். அரிசியின் ஊட்டச்சத்து உள்ளடக்கம் காரணமாக இலங்கை அரிசி வகைகள் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. மற்றைய அனைத்து ஊட்டச்சத்து கூறுகளையும் விட கனியுப்புக்கள் பல்வேறு வகையான உயிரியல் செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதன் மூலம் மனித ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

அரிசியின் வளர்ச்சி மற்றும் உற்பத்தி முக்கியமாக மரபணு காரணிகள் மற்றும் மண்ணின் பண்புகள், உயிரியல் நிலைமைகள் மற்றும் கலாச்சார நடைமுறைகள் உள்ளிட்ட சுற்றுச்சூழல் காரணிகளால் பாதிக்கப்படுகிறது. இலங்கையில், நெல் வகைகள் இரண்டு முக்கிய பயிர்ச்செய்கை பருவங்களைப் பயன்படுத்தி பயிரிடப்படுகின்றன: ‘மஹ’ மற்றும் ‘யல’. மஹ பருவம் செப்டெம்பர் முதல் மார்ச் வரையிலும், யல பருவம் மே முதல் ஆகஸ்ட் இறுதி வரையிலும் அமுலில் இருக்கும். சாகுபடி பருவங்களின் இந்த மாறுபாட்டுடன், சுற்றுப்புற வெப்பநிலை, சாரீரப்பதன், ஒளி கிடைக்கும் காலம், சூரிய கதிர்வீச்சு, மொத்த மழைவீழ்ச்சி  மற்றும் நீர் இருப்பு போன்ற பல்வேறு வேறுபட்ட சுற்றுச்சூழல் நிலைகளின் கீழ் நெல் வகைகள் வளர்க்கப்படுகின்றன. இந்த சுற்றுச்சூழல் நிலைமைகளின் ஏற்ற இறக்கம் நெல் வயல்களின் மண்ணின் பண்புகளை மாற்றும். பின்னர், அது மண்ணிலிருந்து நெற்பயிர்களுக்கு கனியுப்புக்கள் மற்றும் நச்சுத்தன்மை வாய்ந்த கன உலோகங்கள் உறிஞ்சப்படுவதை பாதிக்கும். இது அரிசி தானியங்களின் கனியுப்பு உள்ளடக்கத்தில் மாறுபாட்டை உருவாக்குகிறது.

அரிசியில் உள்ள கனியுப்பு உள்ளடக்கத்தின் மாறுபாட்டிற்கு மற்றொரு முக்கிய காரணம், உற்பத்தி விளைச்சலை அதிகரிக்க அசேதன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு ஆகும். அரிசி தானியங்களில் நச்சுத்தன்மை வாய்ந்த கன உலோகங்களின் திரட்சி பிரதானமாக இந்த உரப் பயன்பாடுகளால் ஏற்படுகிறது.

எனவே, மேற்கூறிய அனைத்து தகவல்களையும் கருத்தில் கொண்டு, இலங்கை பாரம்பரிய மற்றும் மேம்படுத்தப்பட்ட நெல் வகைகளில் கனியுப்புக்கள் மற்றும் கன உலோகங்களின் உள்ளடக்கத்தில் பருவகால மாறுபாடுகளின் தாக்கத்தை ஆராய்வதற்காகவும் தாதுக்கள் மற்றும் நச்சு கன உலோகங்கள் தொடர்பான விரிவான பொருளிலக்கணத்தை உருவாக்கவும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வுக்காக, இலங்கையின் பத்தலகொடவில் உள்ள நெல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் நெல் வயல்களில் பயிரிடப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பாரம்பரிய மற்றும் மேம்படுத்தப்பட்ட நெல் வகைகளில் உள்ள கனியுப்புக்கள் மற்றும் கன உலோகங்களின் உள்ளடக்கம், ICP-MS மற்றும் புற ஊதா- பார்வைக்குரிய (UV- Visible) நிறமாலை ஒளிமானி உடன் இணைந்து ஆய்வுக்கூட சரிபார்க்கப்பட்ட சோதனை முறைகளைப் பயன்படுத்தி கண்டறியப்பட்டது.

இந்த ஆய்வின் நேர்மறையான பலனாக, சாகுபடி பருவகால மாறுபாடு காரணமாக நெல் வகைகளின் கனியுப்புக்கள் மற்றும் நச்சு கன உலோகங்களின் பொருளிலக்கணத்தில் குறிப்பிடத்தக்க தாக்கம் காணப்பட்டது. FAO/WHO வழிகாட்டுதல்களால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச அளவுகளுடன் ஒப்பிடும் போது, ​​பகுப்பாய்வு செய்யப்பட்ட அரிசி வகைகளில் நச்சு கன உலோகங்கள் குறைந்த அளவில் உள்ளமை உறுதி செய்யப்பட்டது. மேலும், பகுப்பாய்வு செய்யப்பட்ட அரிசி வகைகளில் கல்சியம், மக்னீசியம், இரும்பு, துத்தநாகம், பாஸ்பரஸ் உள்ளிட்ட அத்தியாவசிய தாதுக்கள்/ கனியுப்புக்கள் நிறைந்துள்ளன என்பதையும், தாதுப் பற்றாக்குறையைத் தடுக்க உயிர்ச் செறிவூட்டலைச் செய்யாமல் இந்த அரிசி தானியங்களை உட்கொள்ளலாம் என்பதையும் இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. எனவே, இலங்கை அரிசி வகைகளை நெல் இனப்பெருக்க செயல்முறைகளுக்கு கனியுப்பு செறிந்த மூலங்களாக பயன்படுத்தலாம்.

இந்த ஆய்வு, கொழும்பு பல்கலைக்கழகம், கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் பத்தலகொட அரிசி ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் ஆகியவற்றின் கூட்டிணைப்பின் விளைவாகும். சிரேஷ்ட பேராசிரியர் ரஞ்சித் மஹாநாம (இரசாயனவியல் திணைக்களம், விஞ்ஞான பீடம், கொழும்பு பல்கலைக்கழகம்) மற்றும் கலாநிதி சுதர்சன சோமசிறி (மேலதிக பணிப்பாளர் நாயகம்- தொழில்நுட்ப சேவைகள், கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம்) ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் செல்வி/ திருமதி ஷர்மிளா கருணாரத்ன (ஆராய்ச்சி தொழில்நுட்பவியலாளர், கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம்) இன் எம்ஃபில்/பிஎச்டி பட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

எதிர்கால ஆய்வுகளாக, இரு பருவங்களிலும் பயிரிடப்பட்ட நெல் தானியங்களின் கனியுப்புக்கள் கலவையில் உள்ள வேறுபாட்டிற்கு மண் காரணிகளால் பாதிப்பு உள்ளதா என்பதை அறிய, சாகுபடி செய்யப்பட்ட இடங்களின் மண் பண்புகள் மற்றும் அரிசி தானியங்களில் உள்ள கனியுப்புக்கள் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு பகுப்பாய்வு மேற்கொள்ளப்படும்.

சான்றாதாரம்:

Sharmila Karunarathna, Sudarshana Somasiri, Ranjith Mahanama., (2022 February 02). Seasonal variation on mineral profile in rice varieties of Sri Lanka. Journal of Food composition and analysis, 108(2022)104447, 1-7.

https://doi.org/10.1016/j.jfca.2022.104447

எழுதியவர்: ஷர்மிளா கருணாரத்ன

Translated By: Ravichandran Vinushayini