Menu Close

இலங்கையின் வலசைப் பறவையியல் குழு, கொழும்பு பல்கலைக்கழகம் இலங்கையின் புதிரான நீர்ப்பறவைகளின் மர்மமான புலம்பெயர்ந்த பயணங்கள் தொடர்பான முடிச்சுக்களை அவிழ்க்கிறது - பகுதி 03: பழுப்புத்தலை கடற்புறா 2022

இலங்கையில் எங்கள் CAF இடம்பெயர்வு கண்காணிப்பு திட்டத்தின் குறியிடப்பட்ட பறவையினம் இரண்டாவது தடவையாக இமயமலையைக் கடந்ததை நாங்கள் மிகுந்த உற்சாகத்துடன் அறிவிக்கிறோம்.

கடந்த ஆண்டு எங்களின் முதல் குறியிடப்பட்ட பழுப்புத் கடற்புறாவனது (ஹிமா குமாரி) இமயமலையினைக் கடப்பதைப் பார்த்த பிறகு, இம்முறை மீண்டுமொருமுறை மற்றொரு பழுப்புத்தலைக் கடற்புறாவானது வெற்றிகரமாக இமயமலையினைக் கடந்து சென்றதை நாம் 19/05/2022 அன்று கவனித்தோம். கடந்த மார்ச் மாதம் 30ஆம் திகதி இலங்கையின் வடமேற்குப் பகுதியில் உள்ள தலைமன்னார் மீன்பிடித் துறைமுகத்தில் மீண்டும் ஒரு பழுப்புத்தலை கடற்புறாவிற்கு நாங்கள் செய்மதிக் குறியிட்டோம்.

மன்னார் சதுப்பு நிலங்களில் ஒன்றரை மாதங்கள் சுற்றித் திரிந்த எங்களின் பழுப்புத் தலைக் கடற்புறாவானது இறுதியாக மே மாதம் 14ஆம் திகதி இரவு மன்னாரிலிருந்து இரணைதீவு வழியாகப் புறப்பட்டு வட இலங்கையின் பருத்தித்துறை ஊடாக, மே 15 ஆம் திகதி விடியற்காலை ஆந்திராவின் கடற்கரையில் அமைந்துள்ள கோதாவரி ஆற்றை அடைந்தது. இந்த முதல் கட்ட சுற்றுப்பயணத்தை கடற்புறாவனது ஏறத்தாள 900 கி.மீ தூரத்தினை அரை நாட்களுக்குள் முடித்தது.

இந்தியாவில் உள்ள கோதாவரி ஆற்றில் பகலைக் கழித்த கடற்புறாவானது, 15ஆம் நாள் இரவு தனது பயணத்தைத் தொடங்கியது. தெலுங்கானா, ஒடிசா, சத்தீஸ்கர் (வழியில் மகாநதி ஆற்றைக் கடந்து), மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு மேலே பறந்து, 16ஆம் திகதி இரவு பீகாரை வந்தடைந்தது. இந்த ஒரு நாள் பயணத்தில் வியக்க வைக்கும் முகமாக, 1200கி.மீ. தூரத்தைக் கடந்தது. இதன் பின்னர், கடற்புறாவானது கங்கையில் உள்ள பாட்னாவில் (பீகார், இந்தியா) இரண்டு நாட்கள் (17 மற்றும் 18 ஆம் திகதிகளில்) ஓய்வெடுத்தது.

அதன் பின்னர், பயணத்தின் மூன்றாவது நாளானதும் பயணத்தின் மிகவும் சவாலான கட்டமுமான தனது பயணத்தை பாட்னா நிறுத்தத்தில் இருந்து தொடங்கியது. வடகிழக்கில் பறந்து, இந்திய-நேபாள எல்லையை இரவு 10.30 மணியளவில் கடந்து, நள்ளிரவுக்குப் பிறகு பனி மூடிய இமயமலையில் ஏற ஆரம்பித்தது. இதன்போது இக்கடற்புறாவானது சோ ஓயு (8188m – 27,300அடி, உலகின் ஆறாவது உயரமான மலை) மற்றும்; கியாசுங் காங் (7952m – 26,510அடி) சிகரங்களுக்கு இடையே அதிக உயரத்தில் பறந்தது. இலங்கைத் திருநாட்டின் வடக்கு மீன்பிடித் துறைமுகங்களில் இருந்து எங்களுடைய கடற்புறாவானது எவரெஸ்ட் மலைக்கு மேற்கே 20 கிமீ தொலைவில் இமயமலையில் ஏறிக்கொண்டிருந்தது!

69 ஆண்டுகளுக்கு முன்பு, 1953 ஆம் ஆண்டு மே மாதம் இதே பனிப்பொழிவு வழியாக, நியுசிலாந்து ஆய்வாளர் எட்மண்ட் ஹிலாரியுடன் அவர்களின் வரலாற்றுப் பயணத்தில் சென்ற பெரிய ஷெர்பாவைக் கௌரவிப்பதற்காக இக்கடற்புறாவிற்கு 'ஷெர்பா டென்சிங்” என்று பெயரிட்டோம். இவ் இருவரும் சில நாட்களில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தனர். இவர்களே முதன் முதலில் பூமியின் மிக உயரமான சிகரத்தைக் கடந்த முதல் மனிதர்கள் எனப் பெயர் பெற்றார்கள். இமயமலைப் பூர்வீக சமூகத்தைச் சேர்ந்த ஷெர்பா டென்சிங் நோர்கே, 20 ஆம் நூற்றாண்டில் மனிதகுலத்தை பாதித்த முதல் 100 மனிதர்களில் ஒருவராக கருதப்பட்டார்!

நமது ‘ஷெர்பா டென்சிங்’ கடற்புறாவானது 7600m (24,930 அடி) உயரத்தில் இமயமலையைக் கடந்து 19ஆம் நாள் காலை திபெத்திய பீடபூமியை வந்தடைந்தது. நண்பகலில் திபெத்தில் உள்ள பிரம்மபுத்திரா நதியின் துணை நதியான யார்லுங் சாங்போ நதி இது தொடர்ந்தது. கடற்புறாவின் இந்த மூன்றாம் கட்ட பயணமானது கிரகத்தின் மிக உயரமான மலைத்தொடரில் சுமார் 550km ற்கு மேலாக இருந்தது.

மன்னாரிலிருந்து நேபாளம் வழியாக திபெத்துக்கு ஷெர்பா டென்சிங்கின் முழுப் பயணமும் நான்கரை நாட்கள் நீடித்தது, அதில் அது மன்னாரில் கடல் மட்டத்திலிருந்து 24,930 அடி உயரம் வரை பனி மூடிய சிகரங்களில் 4,840km பயணம் செய்து வியக்கத்தக்க வகையில் பயணித்தது!

மத்திய ஆசியப் பறக்கும் பாதையில் புலம்பெயர்ந்த பறவைகளில் இலங்கையின் GPS/GSM செயற்கைக்கோள் குறியிடல் ஆய்வு என்பது பேராசிரியர் சம்பத் செனவிரத்ன தலைமையிலான ஒரு கூட்டு ஆய்வாகும், அதே சமயம் செல்வி. கயோமினி பனாகொட முக்கிய ஆராய்ச்சிக் கூட்டாளராகவும் முனைவர் பட்டம் பெறுவதற்காக இவ்வாய்வினைத் தொடரும் பிரதான ஆய்வாளாராகவும் பணியாற்றுகிறார். செல்வி. பனாகொடாவின் கலாநிதி ஆய்வானது, பேராசிரியர் செனவிரத்ன, பேராசிரியர் சரத் கொட்டகம (கொழும்புப் பல்கலைக்கழகம்), கலாநிதி தேஜ் முட்குர் (வெட்லேண்ட்ஸ் இன்டர்நேஷனல், நெதர்லாந்து) மற்றும் கலாநிதி. எஸ். பாலச்சந்திரன் (BNHS, இந்தியா) ஆகியோரால் மேற்பார்வையிடப்படுகிறது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறையின் இலங்கையின் களப் பறவையியல் குழு (FOGSL) மற்றும் பேராசிரியர் லீ காவ் தலைமையிலான சீன அறிவியல் அகாடமி (CAS) மற்றும் சுற்றுச்சூழல்-சுற்றுச்சூழல் அறிவியலுக்கான ஆராய்ச்சி மையம் (CAS) ஆகிய நிறுவனங்கள் இந்த ஆய்வுக்கான தொழில்நுட்ப உதவியினை கூட்டாக வழங்குகின்றது. வெட்லேண்ட்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் இந்த ஆய்வின் ஒரு பங்குதாரராக உள்ளது. இந்த ஆய்வுக்கு பால்மைரா ஹவுஸ் (பிரைவேட்) லிமிடெட் மற்றும் மன்னாரில் உள்ள வாயு ரிசார்ட் ஆகியவை நிதி அனுசரணையளிக்கின்றன. வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் மற்றும் இலங்கை கடற்படை ஆகியவை களப்பணிகளை மேற்கொள்வதற்கான அனுமதி மற்றும் தள அனுமதியை வழங்குகின்றன.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் விலங்கியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் துறையின் முக்கிய ஆராய்ச்சியாளர்கள் மற்றும் 3ஆம் ஆண்டு விலங்கியல் சிறப்பு மாணவர்கள் (ஆயிஷ்மா, தாருகா, தாருகா, ஜனனி, பிரபாஷினி மற்றும் பவானி) அடங்கிய செயற்கைக்கோள் குறியிடல் குழுவொன்றின் மூலமே, மார்ச் மாதம் ஷெர்பா டென்சிங் குறிக்கப்பட்டார்.

இணைக்கப்பட்ட வரைபடங்கள் மற்றும் குழுவின் புகைப்படங்களைப் பார்க்கவும்.

(Tamil translation is by Mr. Keerthanaram Thanabalasingam, Department of Bioscience, University of Vavuniya)