Menu Close

இலங்கையினரின் இனரீதியான உண்மை:அவிழ்க்கப்பட்ட மறைந்திருந்த சரிதம்

நாம் ஒருவருக்கொருவர் எவ்வளவு தொடர்புடையவர்கள்? உறவு எவ்வளவு தொலைவாகவும் சிக்கலானதாக இருந்தாலும் இரண்டு நபர்களுக்கிடையேயான உறவை எம்மால் கணிக்க முடியுமா? இலங்கையர்கள் உண்மையிலேயே ஒரு பெரிய குடும்பமா? மற்ற இனங்களுடன் நாம் எவ்வாறு தொடர்புடையவர்கள்? பல இலங்கை வாழ் மக்களின் ஆர்வத்தை தூண்டிய இந்த விடைகாணா புதிருக்கு Nature portfolio வின் புகழ்பெற்ற இதழ்களில் ஒன்றான “விஞ்ஞான அறிக்கைகள் " இல் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆராய்ச்சியில் விடை கிடைக்கப்பெற்றுள்ளது .

கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் Genetech Molecular Diagnostics, Colombo (இலங்கையில் DNA ஆராய்ச்சியின் முன்னோடி) ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பின் விளைவாக இப்புரியாத புதிருக்கு விடை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆய்வினை மேற்கொள்வதற்கு தேசிய ஆராய்ச்சி சபை (NRC-National Research Council) மற்றும் இலங்கை மரபணு ஆராய்ச்சி நிறுவனத்தால்
(Genetech Research Institute of Sri Lanka) நிதியளிக்கப்பட்டது. இலங்கையர்களிடையே மனிதர்க்கிடையேயான-உறவு விசாரணையில் நீண்டகாலமாக நிலவிய சந்தேகங்களை பூர்த்தி செய்வதற்காக, X நிறமூர்த்தம் அடிப்படையிலான DNA typing முறையில் உறவுகளை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டது இந்த ஆராய்ச்சி.

இவ் ஆராய்ச்சிக்குழுவில் கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் விலங்கியல் மற்றும் சுற்றுச்சூழல் விஞ்ஞானத்திணைக்களத்தை சேர்ந்த கலாநிதி கயனி கல்ஹெனா, Genetech Molecular Diagnostics நிறுவனத்தைச்சேர்ந்த திரு. நந்திகா பெரேரா மற்றும் திறந்த பல்கலை கழக விலங்கியல் திணைக்களத்தை சேர்ந்த பேராசிரியர் கயா ரணவக ஆகியோர் பங்குபற்றியுள்ளனர் . இக் குழு சமீபத்தில் இலங்கையர்களுக்காக ஒரு புதிய, X நிறமூர்த்தம் அடிப்படையிலான DNA typing மதிப்பீட்டை உருவாக்கியது. இந்த DNA typing உருவாக்கப்பட்டதன் காரணம் யாதெனில் தற்போதுள்ள DNA கைரேகை முறைமைகளில் காணப்படும் சிறிய முரண்பாடுகளினால் ஏற்படுகின்ற தவறான முடிவுகளை நிவர்த்தி செய்வதே ஆகும்.

Figure 1: ஆய்வில் பங்குபற்றிய அங்கத்தவர்கள்

X நிறமூர்த்தம் அடிப்படையிலான DNA கைரேகை குறிப்பாக ஒரு பெண்ணாவது சம்பந்தப்பட்ட சந்தர்ப்பங்களில் மிகவும் சாதகமான முடிவை வழங்கும். இந்த புதிய ஆய்வானது இலங்கையர்களுக்கு இந்த நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான முன்நிபந்தனைகளை நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்டது. X   நிறமூர்த்த தரவுத் தளமானது இலங்கை வாழ் மக்களின் மரபணு தொடர்புகளை வைத்து   தொகுக்கப்பட்டது.

இலங்கை-வாழ்  இனக்குழுக்களின் மரபணு நிலையானது உள்நாடு மற்றும் வெளிநாட்டு அளவீடுகளில் தெளிவாக குறிப்பிடப்பட முடிவதில்லை.  இதற்கு தெளிவான விளக்கத்தை வரலாறு தருகின்றது. கடல்சார் பட்டுப் பாதையின் நடுவில் அமைந்திருக்கும் இலங்கை,  வரலாற்று காலங்களில் பல சந்தர்ப்பங்களிலும் அத்துமீறுபவர்களிற்கு  தங்குமிடமாக அமைந்தது. இந்த வெளிநாட்டு குடியேறிகள்  தான் தற்போழுது இலங்கையில் பெரும்பாலான மக்கள் குடித்தொகையாக காணப்படுகின்றனர். இதில் 99.5% பேர்; சிங்களவர்கள், இலங்கை தமிழர்கள், மூர்ஸ் மற்றும் இந்திய தமிழர்கள் எனும் நான்கு இனங்களிற்குள்ளே அடங்குகின்றனர்

Figure 2: X- நிறமூர்த்த DNA கைரேகையை தயாரிக்க பயன்படுத்தும் 16 குறிப்பான்களின் நிலைகளை விளக்குகிறது.

இந்த நான்கு குழுக்களின் மரபணு உறவுகளை விசாரிக்க, x நிறமூர்த்தத்தில் அமைந்துள்ள 16 மரபணு குறிப்பான்களுடன் உருவாக்கப்பட்ட கைரேகையை இந்த ஆய்வு பயன்படுத்தியது. இலங்கையர்களுக்காக இதுவரை நடத்தப்பட்ட மிகப்பெரிய மரபணு ஆய்வாக இது திகழ்கிறது. இது உறவினர்களல்லாத 838 இலங்கையர்களை வைத்து பரிசோதிக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சி முடிவுகளின்படி, இலங்கையில் உள்ள இந்திய தமிழர்கள் சிங்கள மற்றும் மூர்ஸிலிருந்து ஒரு நுட்பமான ஆனால் புள்ளிவிவர ரீதியாக குறிப்பிடத்தக்க மரபணு உட்பிரிவுத்தொடர்பு கொண்டிருப்பதாகக் காட்டப்பட்டது. இருப்பினும், சிங்களவர்கள், இலங்கை தமிழர்கள் மற்றும் மூர்ஸ் என்போர் மிகவும் கலந்தவர்கள். முக்கியமாக, கீழேயுள்ள படத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளபடி சிங்களவர்கள் இலங்கைத்தமிழர்களை விட மூர்ஸ் இனத்தவர்களோடு மரபணு ரீதியாக நெருக்கமாகன தொடர்பில் உள்ளனர்

Figure 3: X நிறமூர்த்ததின் DNA கைரேகை பகுப்பாய்வின் அடிப்படையில் நான்கு இலங்கை இனங்களுக்கிடையிலான உறவு.

ஆய்வாளர்களின் கூற்றுப்படி, அவர்களின் கண்டுபிடிப்புகள் இலங்கையில் உள்ள நான்கு இனக்குழுக்களின் ஆரம்பகால குடியமர்வுகள் குறித்த வரலாற்று தரவுகளுடன் உடன்படுகின்றன. இலங்கை தமிழர்கள் இந்திய துணைக் கண்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இலங்கைக்கு வந்து பின்னர் சிங்களவர்களுடன் திருமணபந்தத்தின் மூலம் ஒன்றுபட்டனர். மறுபுறம் இந்திய தமிழர்கள் ஆங்கிலேயர்களின் காலனித்துவ காலத்தில் தோட்டங்களில் வேலை செய்வதற்காக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர். மேலும் இவர்கள் பூர்வீக சிங்களவர்களுடனோ அல்லது இலங்கை தமிழர்களுடனோ குறைந்த அளவிலேயே கலந்திருந்தனர். இதற்கு மாறாக, மூர்ஸ் இனத்தவர்கள், இலங்கைக்கு வணிக தேவைகளுக்காக வந்த முஸ்லிம் வணிகத்தவர்களின் வம்சாவளியிலே வந்தவர்கள். இவர்கள் சிங்கள அல்லது இலங்கைத் தமிழர்களாக இருந்த உள்ளூர் பெண்களுடன் இனங்கலந்தனர். எனவே, ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, மூர்ஸ் வம்சாவளியின் x நிறமூர்த்த பகுப்பாய்வில் சிங்கள பெண் வம்சாவளி பிரதிபலிப்பதைக் கண்டு ஆச்சரியப்படுவதற்கில்லை.
இலங்கை மூர்ஸின் தோற்றம் பற்றிய சர்ச்சைகள் குறித்தும் இந்த ஆய்வு வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது. பெரும்பான்மையானவர்கள் நம்புவது யாதெனில் மூர்ஸ் இனத்தவர்கள் இலங்கையில் குடியேறிய அரபு வணிகர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவே ஆகும். ஆனால் அக்கருத்தை எதிர்க்கும் பார்வை கூறுவது என்னவென்றால் அவர்கள் இஸ்லாமிய நம்பிக்கையுடன் வந்த இந்தியர்களின் சந்ததியினராக இருக்க வேண்டும் என்றே. இந்த புதிய ஆய்வின் முடிவுகள் இலங்கை மூர்களுக்கான இந்திய வம்சாவளியை விளக்குவதன் மூலம் பிந்தைய பார்வையை ஆதரிப்பதற்கான ஆதாரங்களை வழங்கியுள்ளன.

ஆராய்ச்சியாளர்கள் ஒரு படி மேலே சென்று, இலங்கையில் உள்ள நான்கு இனங்களின் மரபணு உறவை அனைத்து கண்டங்களையும் உள்ளடக்கிய 14 உலக மக்கள்தொகைகளுடன் ஒப்பிட்டுள்ளனர். கிடைக்கப்பெற்ற முடிவுகளின்படி, இலங்கையர்கள் தெற்காசியர்களுடன் மட்டுமல்ல, ஐரோப்பியர்களுடனும் மரபணு உறவைக்காட்டியுள்ளனர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . இந்தியத் தமிழர்கள் இந்த பிரதான குழுவின் சுற்றளவில் காணப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் தென்கிழக்கு ஆசியர்கள், கிழக்கு ஆசியர்கள் மற்றும் ஆபிரிக்கர்கள் இம்முடிவின் பிரதான குழுவிற்கு வெளியே தூரத்தில் காணப்பட்டுள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளபடி. இந்த முடிவுகள் பண்டைய யூரேசியாவில் மக்கள் நகர்தல்களின் வரலாற்று கூற்றுக்களுடன் நன்கு ஒத்துப்போகின்றன. சிங்களவர்கள் இந்திய -ஆரியர்களிடமிருந்து வந்தவர்கள் என்று நம்பப்படுகிறது. அவர்கள் காஸ்பியன் மற்றும் கருங்கடலின் எல்லைகளிலிருந்து ஐரோப்பா மற்றும் தெற்காசியா நோக்கி, கி.மு மூவாயிரம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் புறப்பட்டனர். அதன்படி,இன்றைய ஐரோப்பிய மற்றும் தெற்காசிய நாகரிகங்கள் தங்கள் வெண்கல யுகத்தின் பொது மூதாதையர்களைப் பிரதிபலிக்கும் பொதுவான மரபணு பின்னணி சிலவற்றை பகிர்ந்து கொள்கின்றன. மறுபுறம் தமிழர்கள் இந்திய துணைக் கண்டத்தின் பழங்குடி மக்களிடமிருந்து வந்தவர்கள் என்று நம்பப்படுகிறது. இருப்பினும், இலங்கை தமிழர்கள் இந்திய தமிழர்களைப் போலல்லாமல் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளில் சிங்களவர்களுடன் இனங்கலந்துள்ளனர். இது ஆய்வில் காணப்பட்ட அவர்களின் தொடர்புடைய மரபணு நிலைகளை தெளிவாக விளக்குகின்றது

இந்த முடிவுகளின் அடிப்படையில், X நிறமூர்த்தம் அடிப்படையிலான DNA கைரேகையைப் பயன்படுத்துவதற்கு இந்திய தமிழர்களுக்கு தனி மரபணு தரவுத்தளத்தை (எதிருரு மீடிறன்கள் ) பயன்படுத்த ஆராய்ச்சி பரிந்துரைத்துள்ளது. இதற்கு மாறாக, சிங்கள, இலங்கைத் தமிழ் மற்றும் மூர் இனங்களுக்கு பொதுவான மரபணு தரவுத்தளத்தைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.
இலங்கை இனங்களின் X நிறமூர்த்தம் அடிப்படையிலான மக்கள்தொகை வரலாற்றை ஆராயும் முதல் ஆய்வைக் குறிக்கும் இந்த ஆராய்ச்சியானது இலங்கையர்களுக்கு மூலக்கூறு தடயவியல் துறையில் ஒரு புதிய வழியைத் திறந்து, சிக்கலான உறவினர் வழக்குகளை தீர்க்க உதவுகிறது. இலங்கையர்களாகிய நாம் இத்தகைய கண்டுபிடிப்புகள் குறித்து தாழ்மையுடன் பெருமிதம் கொள்ளவேண்டும். மேலும் இந்த ஆய்வுகளைத் தொடர நமது விஞ்ஞான சமூகத்தை ஊக்குவிப்பதோடு இவ்வாறான அறிவியல் கண்டுபிடிப்புகளின் மூலமாக விஞ்ஞானத்துறையிற்கு அதிக அறிவை வழங்க முன்வருதலை பெருமிதத்துடன் வாழ்த்திடுகின்றோம்.

Reference: 

Perera, N., Galhena, G., & Ranawaka, G. (2021). X-chromosomal STR based genetic polymorphisms and demographic history of Sri Lankan ethnicities and their relationship with global populations. Scientific Reports 2021 11:1, 11(1), 1–12. https://doi.org/10.1038/s41598-021-92314-9  

Content Images Courtesy: Dr. Gayani Galhena

Written By: Samuel Thevaruban Jegapragashan