Menu Close

கொரோனா எனும் வார்த்தை, 2019 ஆம் ஆண்டிறுதி தொடக்கம்  ஒரு வருடத்திற்கும் மேற்பட்ட காலமாக உலகையே உலுக்கிப்போட்டுக்கொண்டிருக்கின்றதுகொரோனா  என்பது என்ன? இது உலகளாவிய ரீதியில், 220 நாடுகளில் 180 மில்லியன் மக்களிற்கு தொற்றை ஏற்படுத்தி, 3.9 மில்லியன் மக்களின் உயிரை காவு வாங்கி, பெருந்தொற்று நிலைமையை ஏற்படுத்தியுள்ளமை அனைவரும் அறிந்ததே. இது எவ்வாறு உருக்கொண்டது? எவ்வாறு இவ்வளவு குறுகிய காலப்பகுதியில் இவ்வளவிலான பாரிய பாதிப்பை ஏற்படுத்தியது? இந்நாட்களில் பரவலாக கேட்கப்படும் கேள்விகள் இவை.

SARS-CoV-2 என்பது ‘கொரோனா வைரஸ்’ எனப்படும் வைரஸ் குடும்பத்தில் உள்ளடங்கும். இவ்வைரஸ் அல்பா, பீட்டா, காமா, மற்றும் டெல்டா என நான்கு வேறுபட்ட இனங்களைக்கொண்டது. மனிதர்களையும் விலங்குகளையும் தொற்றும் பலவகையான கொரோனா வைரஸ்கள் இவ்வைரஸ்குழுவைச்சாரும். இதுவரை, மனிதர்களைத்தொற்றும் 7 வகையான கொரோனா வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2003 ஆம் ஆண்டில், சீனாவில் பரவிய SARS-CoV, 2012 ஆம் ஆண்டில் மத்திய கிழக்கு நாடுகளில் பரவிய MERS-CoV மற்றும் இப்பொழுது பரவி வரும் பெருந்தொற்றை ஏற்படுத்திய SARS-CoV-2 வைரஸ் என்பவை இதனுள் அடங்கும்.

கொரோனா  வைரஸ் என்பது மனிதர்களையும் மேலும் சில முள்ளந்தண்டுளிகளையும் தொற்றும் முக்கிய நோய்க்கிருமிகளில் ஒன்றாகும். இவை மனிதர்கள், பண்ணை விலங்குகள், பறவைகள், வெளவால்கள், எலிகள் மற்றும் பல காட்டுவிலங்குகள் போன்றவற்றின் சுவாசத்தொகுதி, உணவு சமிபாட்டுத்தொகுதி, ஈரல் மற்றும் மத்திய நரம்புத்தொகுதி என்பவற்றை தொற்றக்கூடியது. விலங்குகளிலேயே, SARS மற்றும் MERS உள்ளடங்கலான கொரோனா வைரஸ்களிற்கான விருந்துவழங்கித்தேக்கமாக வெளவால்களே பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வைரஸ்கள், விலங்கு-மனித மற்றும் மனித-மனித பரவுகையில் ஈடுபடும்பொழுது இறுதியில் அது விலங்குதரு நோய் ஆகின்றது. Zoonotic spillover event என்பது, அதிக நோய்க்கிருமிகளை கொண்ட விருந்துவழங்கித்தேக்கமான வெளவால்கள் போன்ற விலங்குகள், புதிய விருந்துவழங்கிகளான மனிதர்களோடு தொடர்புகொள்ளும்போது ஏற்படும் தொற்று ஆகும்.

எவ்வாறாயினும் விலங்குகளிலிருந்து மனிதருக்கு இப்பரவுகை இடம்பெற வைரஸினுள் முக்கிய பரிணாம மாற்றங்கள் எனும் பிறழ்வுகள் இடம்பெறுதல் அவசியமாகும். நோய்த்தேக்கக்குடித்தொகையில் இருந்து தொற்றிய நோய்க்கிருமிகள் விருந்து வழங்கிகுடித்தொகையில் தொற்றலாம், தொற்றாமல் கூட போகலாம். மேலும் சில சந்தர்ப்பங்களில் பரவுகை இடம்பெற்றாலும் அவை மனித இனத்திற்கு பாதிப்பற்றவையாக இருக்கலாம். 

ஆராய்ச்சி குழு

ஆகவே கொழும்புப்பல்கலைக்கழக விஞ்ஞானபீட விஞ்ஞானிகளின் குழுவொன்றால் ஜேர்மனியின் ரொபர்ட் கோச் நிறுவனத்தோடு இணைந்து கண்டுபிடித்த நவீன விஞ்ஞான கண்டுபிடிப்பின் ஆச்சரியமிகு விடயம் தான் என்ன? 2019 ஆம் ஆண்டில் SARS-CoV-2 இன் பரவலுடன் வெளவால்களில் காணப்படும் இக்கொரோனா வைரஸ்கள் பற்றிய ஆர்வம் அதிகரித்தது. எவ்வாறாயினும் கொரோனா வைரஸ் இப்பெருந்தொற்றை ஏற்படுத்த முன்பே, 2017ஆம் ஆண்டு தொடக்கம் இவ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பாலூட்டிகளான வெளவால்கள் (Chiroptera), உலகளாவிய ரீதியில் 2ஆவது அதிக இனப்பல்வகைமையைக் கொண்ட ஓர் வருணம் ஆகும். இலங்கையில் வாழும் வெளவால் இனங்களில் Yinpterochiroptera மற்றும் Yangochiroptera எனும் இரண்டு உபவருணங்களைச்சேர்ந்த வெளவால்கள் அதிகமாக காணப்படுவதுடன் இலங்கையில் காணப்படும் 31 பாலூட்டி இனங்களின் 1/3 பகுதியை இவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. வெளவால்களின் இனப்பல்வகைமை மற்றும் அவற்றின் சிறப்பம்சங்களான நீண்ட தூரத்திற்கு பறக்கக்கூடியமை, இடம்பெயர்வு நடத்தை, கூடிவாழும் நடத்தை, என்பவை இவை இயற்கையாகவே வைரஸ்களிற்கு விருந்து வழங்கித்தேக்கமாக அமைய காரணமாகின்றன. வெளவால்கள் மற்றும் வைரஸ்களின் இணைப் பரிணாமம் பற்றி கற்று மனிதர்களுக்கு தொற்றும் விலங்குதரு நோய்கள் பற்றி அறிவதற்கு இவ்வகையான தனித்தன்மை வாய்ந்த விருந்துவழங்கிகளைப்பற்றி கற்பது வைரஸ்கள் சம்பந்தமான கற்கையில் முக்கிய இடம் வகிக்கின்றது.

மேலும், வைரஸ் கடத்தப்படும் பொறிமுறைகள் மற்றும் வைரஸ்-விருந்துவழங்கி இடைவினைகள் பற்றிய மேம்படுத்தபட்ட அறிவு, வைரஸ்களிற்கு எதிரான மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதிலும் எதிர்கால பெருந்தொற்றுகளை சமாளிப்பதற்கான ஆயத்தங்களிற்கும் பாரிய உதவியாக அமையும். அதீத இனப்பல்வகைமை காரணமாக வெளவால் இனங்களில் மருத்துவ ரீதியில் முக்கியத்துவம் பெறும் கொரோனா வைரஸ் உட்பட பல நோய்க்கிருமிகள் காணப்படும் எனும் கருதுகோளை விஞ்ஞானிகள் குழு வெற்றிகரமாக முன்வைத்தனர். அதற்கிணங்க மேற்குறிப்பிட்ட கருதுகோளை மையப்படுத்தி ஆராய்ச்சி முன்னெடுக்கப்பட்டது. இவை சம்பந்தமான கற்கைச்செயற்பாடுகள் வெவ்வேறு இனத்தைச்சேர்ந்த வெளவால் இனங்கள் ஒன்றாக ஓரிடக்காலனியாக வாழும் இலங்கை, கொஸ்லாந்தையில் இருக்கும் வவுல் கல்கெ குகையில் மேற்கொள்ளப்பட்டன.

2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற 3 களச்செயற்பாடுகளில் Miniopterus, Rousettus, Hipposideros, மற்றும் Rhinolophus இனங்களைச்சேர்ந்த 395 வெளவால்கள் பிடிக்கப்பட்டு மலக்குடல்சார் துடைப்புக்கள் மற்றும் மல மாதிரிகள் இவைகளிடமிருந்து சேகரிக்கப்பட்டன. இம்மாதிரிகளில் கொரோனா வைரஸ்களை இனங்காண்பதற்காக nested PCR முறை மற்றும் வேறு பல மூலக்கூற்று தொழில்நுட்ப முறைகள் முன்னெடுக்கப்பட்டன இவ்வாராய்ச்சியின் முடிவில் இலங்கையில் முதன்முறையாக, α மற்றும் β கொரோனா வைரஸ் வகை வைரஸ்களை முறையே, M. fuliginosus மற்றும் R. leschenaultii எனும் வெளவால் இனங்களில் கண்டுபிடித்தனர்.

இவ்வாராய்ச்சியின் முடிவுகளாவன, கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ்கள் வெளவால் இனங்களிற்கு தனித்தன்மை வாய்ந்தமையும், இவை வவுல் கல்கெ குகையில் ஓரிடவாழிகள் ஆயினும் இனங்களிற்கிடையேயான பரவுகை காணப்படவில்லை என்பவையே ஆகும்.  சில வெளவால் இனங்கள் மாத்திரமே SARS-CoV போன்ற மனிதர்களிற்கு தீங்கு விளைவிக்கும் தொற்றை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ்களிற்கான தேக்கமாக செயற்படுகின்றன எனும் கருதுகோள் இதன் மூலம், உறுதிப்படுத்தப்படுகிறது.  அத்துடன், சூழற்காரணிகள் மற்றும் வெளவால்களின் வாழிடத்தினுள் மனித ஊடுருவல் என்பவற்றினாலேயே இவ்வகை கொரோனா வைரஸ்கள் மனிதருக்கு பரவுகின்றன எனும் கருத்து முன்வைக்கப்படுகின்றது. குறிப்பிட்ட ஆராய்ச்சியின்படி வெளவால் இனங்கள் மற்றும் அவற்றின் வைரஸ்களைப்பற்றிய கற்கைகள், அத்துடன் அவை அவற்றின் இயற்கைச்சூழலுடன் ஏற்படுத்திக்கொள்ளும் இடைவினைகள் பற்றிய கற்கைகள் ஆகிய இரண்டும் எதிர்காலத்தில் விலங்குதரு நோய் பரவலை தடுப்பதற்கு மிக முக்கியமான காரணிகளாகும்.

ஜேர்மனியின் ரொபர்ட் கோச் நிறுவனத்தின் உயிரியல் அச்சுறுத்தல்கள் மற்றும் விசேட நோய்க்கிருமிகளிற்கான நிலையத்தின், அதீத நோய்கிருமிகளிற்கான பிரிவைச்சேர்ந்த  செல்வி தேரேஸ் முஸினிக் மற்றும் கொழும்புப்பல்கலைக்கழக உயிர் இரசாயனவியல், மூலக்கூற்று உயிரியல், மற்றும் உயிர் தொழில்நுட்பவியலிற்கான நிறுவனத்தைச்சேர்ந்த செல்வி தேஜானீ பெரேரா ஆகியோரின் PhD கற்கைக்காக மேற்கொள்ளப்பட்ட இவ்வாராய்ச்சி உலக சுகாதார பாதுகாப்பு நெறிமுறையின் Identification of Emerging Agents (IDEA) செயற்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. கொழும்புப்பல்கலைக்கழக  விஞ்ஞானபீட விலங்கியல் மற்றும் சூழலியல் திணைக்களத்தின் IDEA ஆய்வுக்கூடத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் Prof .விபுல யாப்பா, பேராசிரியர் Prof. சுனில் பிரேமவம்ச, பேராசிரியர் Prof. இனோக்க பெரேரா மற்றும் திரு சஹன் சிறிவர்தன ஆகியோர் மற்றும் வட கொழும்பு போதனா வைத்தியசாலையின் வைத்தியர் Dr கயனி பிரேமவம்ச என்பவர்களினால் இவ்வாராய்ச்சி வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது

கொழும்புப்பல்கலைக்கழக விஞ்ஞானபீடம் என்ற வகையில் ஆராய்ச்சிக்குழுவிற்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு, திறமையான இக்குழு எமது பீடத்தை சார்ந்தது என்பதையும் பெருமிதத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஏனெனில், நாம் நிகழ்காலத்தில் எதிர்கொள்ளும் பல சவால்களிற்கு விஞ்ஞானத்தின் மூலம் விடை காணலாம் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

மேற்கோள்: Muzeniek, T., Perera, T., Siriwardana, S., Bas, D., Kaplan, F., Öruc, M., Becker-Ziaja, B., Schwarz, F., Premawansa, G., Premawansa, S., Perera, I., Yapa, W., Nitsche, A., & Kohl, C. (2021). Detection of Alpha- and Betacoronaviruses in Miniopterus fuliginosus and Rousettus leschenaultii, two species of Sri Lankan Bats. Vaccines, 9(6), 650. https://doi.org/10.3390/vaccines9060650

Image courtesy:

Title image: https://indiabiodiversity.org/biodiv/img/Rousettus%20leschenaulti/988_gall.jpg

Content image: Ms. Thejanee Perera.

 பரிவர்த்தனை: ர .வினுஷாயினி